பெண்ணுக்கு ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணமாக ரூ.10 வலிசூக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணுக்கு ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த பீர்முகம்மது மகள் பஹ்மிதா (வயது 22). இவர் தனது உறவினரை 7-1-2021 அன்று நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து சென்னைக்கு வழியனுப்ப மோட்டார் சைக்கிளில் வந்தார். ரெயில் நிலையத்தில் பஹ்மிதாவிடம் ரூ.10 மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணமாக அங்கிருந்த வாகன காப்பக ஒப்பந்ததாரர் வசூலித்தார். அப்போது அவர் தனது உறவினரை வழியனுப்புவதற்கு மட்டுமே வந்துள்ளதாகவும், வாகனத்தை பார்க்கிங் செய்யவில்லை எனவும் கூறினார். ஆனாலும் ஒப்பந்ததாரர் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணம் ரூ.10-ஐ செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பஹ்மிதா, வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரணை நடத்தி, பஹ்மிதாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு ரூ.2 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.12 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டனர்.