விவசாயிக்கு பயிர்க்காப்பீடு தொகையை பெற்றுத்தராத கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

விவசாயிக்கு பயிர்க்காப்பீடு தொகையை பெற்றுத்தராத கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2022-12-20 19:15 GMT

விவசாயிக்கு பயிர்க்காப்பீடு தொகையை பெற்றுத்தராத கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

பயிர்க்காப்பீடு பிரீமியம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவர் கண்டிரமாணிக்கம் வடக்குத்தெருவில் உள்ள கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது 4½ ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிருக்காக கடந்த 2020-21-ம் ஆண்டு காப்பீடு பிரீமியமாக ரூ.1,302-ஐ கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தி இருந்தார்.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு

அந்த ஆண்டில் அந்த கிராமத்துக்கான அரசின் பயிர் சேத மதிப்பீடாக 32 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கணேசனுக்கு வரவேண்டிய ரூ.47 ஆயிரத்து 250 பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் கூட்டுறவு சங்கத்தில் கேட்டபோது உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக அவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி வக்கீல் மூலம் கூட்டுறவு சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, காப்பீடு நிறுவனமே பொறுப்பு என்று கூட்டுறவு சங்கம் பதில் மனு அனுப்பி உள்ளது.

இதனையடுத்து கணேசன் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி தலைமையிலான உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்காப்பீடுக்கான பிரீமியத்தை கணேசன் செலுத்தி உள்ளார். எனவே அவருக்கு உரிய பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்ளது.

ஆனால் கூட்டுறவு கடன் சங்கம் அந்த பொறுப்பை ஏற்காமல், இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டுமே இதற்கு பொறுப்பு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கணேசனுக்கு சேர வேண்டிய பயிர்க்காப்பீடு தொகையான ரூ.47 ஆயிரத்து 250, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரத்தை கூந்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் இன்சூரன்சு நிறுவனம் ஆகியவை இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அமர்வு உத்தரவிட்டது.

மேலும் தீர்ப்பளித்த நாளில் இருந்து 6 வார காலத்துக்குள் இந்த தொகையினை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்