ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி பழுது ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி பழுதடைந்ததை தொடர்ந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ஆன்லைனில் வாங்கிய மடிக்கணினி பழுதடைந்ததை தொடர்ந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ஆன்லைனில் மடிக்கணினி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஆன்லைன் மூலமாக ரூ.39,999 மதிப்புள்ள மடிக்கணினி ஒன்றை வாங்கினார்.
அந்த மடிக்கணினி டெலிவரி செய்யப்பட்ட அன்றே அதன் திரை (டிஸ்பிளே) வேலை செய்யாத காரணத்தினால் இது குறித்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கும், சம்பந்தப்பட்ட மடிக்கணனி நிறுவனத்திற்கும் புகார் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு
இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் வீட்டிற்கு வந்த மடிக்கணினி நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர், மடிக்கணினியில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் பலமுறை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் மற்றும் மடிக்கணினி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு பேசியும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அவர் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்யலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இருவரும் பொறுப்பு
அதில் அவர்கள் கூறியதாவது:- ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் தாங்கள் பொறுப்பு இல்லை என்று கூறுவதையும், மடிக்கணினி நிறுவனம் மட்டுமே இதற்கு பொறுப்பு என்பதையும் இந்த ஆணையம் ஏற்க மறுக்கிறது. இந்த விவகாரத்தில் இருவருமே பொறுப்பானவர்கள் என்று இந்த ஆணையம் கருதுகிறது.
புகார்தாரருக்கு சரிவர சேவை செய்யாததால் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மடிக்கணினிக்கு பதிலாக புதிய மடிக்கணினியை வழங்க வேண்டும்.
ரூ.50 ஆயிரம் இழப்பீடு
மேலும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் இந்த நிறுவனத்தில் இதுபோன்று பல பேர் பொருட்கள் வாங்கி பாதிப்படைத்து இருப்பார்கள் என்பதால் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கிற்கு ரூ.2 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும்.
இந்த தொகையினை மும்பையை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், திருச்சியை சேர்ந்த மடிக்கணினி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த மடிக்கணினி நிறுவனம் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தோ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.