அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்டத்தில், மத்திய அரசின் eshram என்ற வலைதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்வது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் என்.ஜி.ஓ. மற்றும் பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளருடன் நேற்று முன்தினம் கரூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராமராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசின் வலைதளத்தில் 18 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், விவசாயத்தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்கள் போன்றவர்களை https://eshram.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்தி்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. மேற்படி தொழிலாளர்கள் ஈ.எஸ்.ஐ, பி.எப் மற்றும் என்.பி.எஸ் பிடித்தம் செய்யப்படுபவர்களாகவும், வருமான வரி செலுத்துபவர்களாகவும் இருக்கக்கூடாது. பதிவு செய்ய ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் அவசியம். மத்திய அரசின் eshram வலைதளத்தில் அதிகளவில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மத்திய,மாநில தொழிற்சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களையும் பொதுசேவை மையத்துடன் இணைந்து மேற்படி வலைதளத்தில் விடுதலின்றி பதிவு செய்யலாம். தன்னிச்சையாகவும் (Self Registration) மேற்படி வலைத்தளத்தில் பதிவு செய்யலாம். பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பிரதான் மந்திரி சுரக்ஷா திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.