கோடைகால பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை:ஏற்காட்டுக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல தடை-கலெக்டர் கார்மேகம் தகவல்

ஏற்காட்டுக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-14 22:29 GMT

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் காஷ்யாப் ஷஷாங் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, ஆத்தூர் கோட்ட வன அலுவலர் சுதாகர், உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, சவும்யா, தணிகாச்சலம், சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோடை காலம் தொடங்க உள்ளதையொட்டி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கலெக்டர் பேட்டி

இது குறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பாலமலை, கல்வராயன்மலை, சேர்வராயன்மலை, பச்சமலை, ஜருகுமலை உள்ளிட்ட மலைப்பகுதிகள் உள்ளன. சேலம் மாவட்ட மொத்த நிலப்பரப்பில் 28 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளது. எனவே, வனப்பகுதிகளுக்கு எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் தீ வைப்பதை தடுத்தல், கால்நடை மேய்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கண்காணிப்பு கோபுரம் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மலைப்பகுதி கண்காணிப்பு

குறிப்பாக ஏற்காட்டுக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 101 மற்றும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கோடை காலங்களில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் காடையாம்பட்டி, ஓமலூர் ஒட்டிய மலைப்பகுதி, சேலம் குமரகிரி மலை, வாழப்பாடி, பி.என் பாளையம், தலைவாசல், கெங்கவல்லி, ஏற்காடு வட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஏற்காடு அடிவாரம் மற்றும் மேட்டூர் பாலமலை பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு காட்டுத் தீ தொடர்பாக துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டில் கேம்ப் பயர் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்