திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து கலந்தாய்வு
குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
கலந்தாய்வு கூட்டம்
குமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சார்பில் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல்
நேற்றைய வேட்புமனு தாக்குதலில் காலை 11 மணி முதல் 3 மணி வரை எந்த உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சி பகுதிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 52 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களும், 4 நகராட்சிகளில் உள்ள 98 நகராட்சி வார்டு உறுப்பினர்களும், 51 பேரூராட்சிகளில் உள்ள 826 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுப்பார்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 987 ஆகும்.
வாக்கு எண்ணப்படும்
இத்தேர்தலுக்கான வேட்பு மனு படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் வழங்கப்படும். வேட்புமனு பரிசீலனைக்கு பின் தகுதியான வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகர செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.