குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் கலந்தாய்வு கூட்டம்

ஊட்டியில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

Update: 2023-01-10 18:45 GMT

ஊட்டி,

ஊட்டியில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

அடிப்படை வசதிகள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:- ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. விழா நடைபெறும் இடத்தில் காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் நகராட்சி மூலம் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பள்ளி கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பழங்குடியின மக்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வளர்ச்சி பணிகள்

குடியரசு தின விழா சிறப்பாக நடைபெறும் வகையில், ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, துறை வாரியாக வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் முகவரி திட்டம், மலைவாழ் மற்றும் பழங்குடியினரிடம் இருந்து சிறப்பு இலக்குப்படை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை புதுப்பித்தல் மற்றும் நிலுவை இனங்கள் பதிவு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், திட்டமிட்டு பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), பிரான்சிஸ் சேவியர் (கூடலூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்