கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
சிதம்பரத்தில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் 10 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், கொள்ளிடம் ஆதனூரில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கென ரூ.255 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், உலக வங்கி சார்பில் ரூ.41 கோடி நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
இத்திட்ட பணிகளை தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி ஆதார நிறுவன மூத்த தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நகராட்சி குடிநீர் வழங்கல் பொறியாளர் வைத்தீஸ்வரன், உலக வங்கி அதிகாரிகள் தீபா பாலகிருஷ்ணன், அருண் ஜக்கி உள்ளிட்டோர் சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி ஆதார நிறுவன மூத்த தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், கூட்டு குடிநீர் திட்டத்தில், எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் நடைபெற உள்ளது என்பது குறித்தும், வீடுகளுக்கு வழங்கப்படும் இணைப்புகள் தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வின், பொறியாளர் மகராஜன், அண்ணாமலை நகர் செயல் அலுவலர் பாலமுருகன், தொழில்நுட்ப உதவியாளர் ஜஸ்டின் ராஜா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.