வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா குறித்து ஆலோசனை கூட்டம்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளி விழா ஊர் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 50-வது ஆண்டு விழா விமர்சையாக நடத்துவது குறித்து விழாக்குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில், ஆடி முதல் வெள்ளி விழாவையொட்டி அடுத்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி (வியாழக்கிழமை) கோவில் வெளிவளாகத்தில் உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூழ்வார்க்கும் திருவிழா, கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் ஜோடித்து கோவில் வரை திருவீதி உலா, இரவில் கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டையுடன் நூதன புஷ்பப்பல்லக்கு வீதி உலா நடத்துவது, 22-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் அருகாமையில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருட அபிஷேக விழாவையொட்டி கோவிலில் சங்க அபிஷேகம் நடக்கிறது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.