கட்டிட தொழிலாளி தற்கொலை; தாய்க்கு தீவிர சிகிச்சை

சேரன்மாதேவி அருேக குடும்ப தகராறில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-07-23 20:13 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருேக குடும்ப தகராறில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறு

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்சடையான்குளம் மறவர் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி மீனா (வயது 55). இவர்களுடைய மகன் மணிகண்டன் (25). கட்டிட தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன், உமாவுக்கு இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன் தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உமாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு, உமா தனது குழந்தையுடன் செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மாத்திரைகள் தின்று சாவு

இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது தாயார் மீனா உடல்நிலை பாதிக்கப்பட்டு சாப்பிடும் மாத்திரையை எடுத்து அளவுக்கு அதிகமாக தின்று மயங்கினார். இதனைப்பார்த்த மீனாவும் அதிக அளவில் மாத்திரையை தின்றார்.

நேற்று காலை மணிகண்டன் வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்லை.

பின்னர் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் இறந்து கிடந்தார். மீனா மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாய்க்கு தீவிர சிகிச்சை

இதுகுறித்து அவர்கள் பத்தமடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மணிகண்டன் சகோதரி லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்