கட்டிட தொழிலாளியை காரில் கடத்தி தாக்குதல்

கும்பகோணத்தில், முன்விரோதத்தில் கட்டிட தொழிலாளியை காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-26 20:27 GMT
கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் தமிழ்ச்செல்வன்(வயது 32). இவர், கட்டிடங்களுக்கு கம்பி கட்டும்(சென்ட்ரிங்) வேலை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், இதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வன், விஜயகுமார் குடும்பத்தினருக்கு இடையே நடந்த தகராறில் தமிழ்ச்செல்வனின் தாயார் மற்றும் தங்கை இருவரும் காயம் அடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரில் கடத்திச்சென்றனர்

நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயார் மற்றும் தங்கைக்கு கும்பகோணம் பக்தபுரித் தெரு ரவுண்டானா பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர், தமிழ்ச்செல்வனை காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் காரில் கடத்தி செல்லப்பட்ட தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வனை காரில் கடத்திச் சென்ற விஜயகுமார் உள்பட 10 பேரும் சேர்ந்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கி விட்டு அவரை அரசு ஆஸ்பத்திரி பின்புறமுள்ள காவிரி ஆற்றங்கரையில் தூக்கி வீசினர்.

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக தமிழ்ச்செல்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இந்த நிலையில், போலீசார், தமிழ்ச்செல்வனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

4 பேர் கைது; 6 பேருக்கு வலைவீச்சு

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை காரில் கடத்தி சென்ற சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் விஜயக்குமார்(24), தாராசுரம் ஜெயப்பிரகாஷ்(39), இதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் அபிமன்யு(23), பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த்(30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்