கத்திக்குத்தில் காயமடைந்த கட்டிட தொழிலாளி சாவு

நாகர்கோவில் அருகே கத்திக்குத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார். இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Update: 2022-06-30 21:56 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே கத்திக்குத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார். இதனை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கட்டிட தொழிலாளி

தெங்கம்புதூர் அருகே உள்ள காட்டுவிளை கலைஞர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளி. சொத்தவிளையை சேர்ந்தவர் அருண் மார்த்தாண்டன் (31).

இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 26-ந் தேதி அன்று அருண் மார்த்தாண்டன் வீட்டுக்கு மணிகண்டன் சென்றார். அப்போது அங்கு நைனாபுதூரை சேர்ந்த குமார் என்ற ராம்குமார் (30) என்பவரும் இருந்தார். அங்கு மணிகண்டனுக்கும், அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த அருண் மார்த்தாண்டன் கத்தியை எடுத்து மணிகண்டனின் காது அருகே குத்தியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு மணிகண்டனை தேடி அவருடைய தம்பி பாலமுருகன் வந்தார். அங்கு உயிருக்கு போராடிய மணிகண்டனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே சமயத்தில் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

மேலும் இதுகுறித்து பாலமுருகன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் அருண் மார்த்தாண்டன், குமார் என்ற ராம்குமார் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இதற்கிைடயே மணிகண்டனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்