லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கட்டிட தொழிலாளி
கடலூர் மாவட்டம் தில்லைநாயகபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜ் கண்ணன்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜி(23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ் கண்ணன், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியில் தங்கி இருந்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன், கடலூர் மாவட்டம் அழங்காத்தான் தேவர் தெருவை சேர்ந்த நண்பரான கோபு(38) என்பவரும் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் இரவில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவுக்கு வந்தனர். பின்னர் மளிகை பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் சிங்கையன்புதூருக்கு திரும்பி சென்றனர்.
சம்பவ இடத்திலேயே...
மோட்டார் சைக்கிளை ராஜ் கண்ணன் ஓட்டினார். கோபு, பின்புறம் அமர்ந்திருந்தார். கிணத்துக்கடவு-சொக்கனூர் சாலையில் காதறுத்தான் மேடு என்ற பகுதியில் சென்றபோது, திடீரென ராஜ் கண்ணனின் கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்தது. தொடர்ந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபு, படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர், கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பிரேத பரிசோதனை
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், கோபுவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜ் கண்ணனின் உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், லாரி டிரைவரான கோவை ஈச்சனாரி சர்வர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.