ரூ.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை

பூண்டி- பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் ரூ.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2023-09-30 12:24 GMT

அனுப்பர்பாளையம்

பூண்டி- பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் ரூ.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வுக்கு பின்னர் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.158 கோடியே 7 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணிகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்றும் வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 15 வேலம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரு.36 கோடியே 43 லட்சம் மதிப்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவன உதவியுடன் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை 4 தளங்களில் 86 படுக்கை அறைகளுடன், அனைத்து தொழில்நுட்பட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் பூண்டி-பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் ரூ.86 கோடியே 94 லட்சம் மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைய உள்ளது. நெருப்பெரிச்சல் பாரதிநகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 384 குடியிருப்புகள் கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டது. 33-வது வார்டுக்குட்பட்ட மண்ணரை பகுதியில் 34 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டுள்ள மூலிக்குளத்தை ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கரைப் பலப்படுத்துதல், அகலப்படுத்துதல் ஆகாய தாமரை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த குளத்தை சுகாதாரமாக அமைத்து எதிர்காலத்தில் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும். மேலும் மாநகராட்சி பகுதியில் ரூ.158 கோடியே 7 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்