கிடப்பில் போடப்பட்ட சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கிடப்பில் போடப்பட்ட சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-06-11 22:00 GMT


தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கிடப்பில் போடப்பட்ட சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றனர்.

விளையாட்டு மைதானம்

மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கி கொள்ளும், பரிசோதித்து கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மனநலத்தையும் பெறலாம். மாணவர்கள் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது அவர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. தொடர் பயிற்சிகளால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், நல்ல ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகின்றனர்.

இதனால் மாணவ-மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதுடன், அவர்களது திறமையை வெளிக்கொண்டு வந்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க வைப்பதற்காக தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் விளையாட்டு மைதானத்தை தமிழகஅரசு அமைத்துள்ளது. அதேபோல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் கணபதிநகரில் 23½ ஏக்கர் பரப்பளவில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

சிரமம்

இங்கு கூடைப்பந்து, கைப்பந்து விளையாடுவதற்காக தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆக்கி, கால்பந்து, கபடி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கும் தனியாக மைதானம் உள்ளது. நீச்சல்குளம், இறகுபந்து விளையாட உள்விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் தனித்தனியாக இடவசதிகள் உள்ளன.

100 மீட்டர், 500 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் என ஓட்டப்போட்டி நடத்தும்போது மண் தரையிலான ஓடுதளத்தில் தான் மாணவ, மாணவிகள் ஓட வேண்டிய நிலை உள்ளது. இந்த தளத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு விட்டு சர்வதேச தரத்திலான ஓடுதளத்தில் மாணவர்கள் ஓடும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன.

சிந்தடிக் ஓடுதளம்

இதனால் சர்வதேச தரத்திலான சிந்தடிக் ஓடுதளம் தஞ்சையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 400 மீட்டர் தூரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் அமைக்க மத்திய, மாநிலஅரசுகள் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியது.

இந்த பணியை செய்ய மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்குழு அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது.

விரைந்து முடிக்க வேண்டும்

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிந்தடிக் ஓடுதளம் அமைப்பதற்கான சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக மண் நிரப்பிய பிறகு தமிழகஅரசின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிகளை பார்வையிட்டு அறிக்கை அளிக்கவில்லை. இதனால் அந்த பணி தொடர்ந்து நடைபெறவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மண் நிரப்பிய இடங்களில் செடி, கொடிகள் வளர தொடங்கிவிட்டன.

சிந்தடிக் ஓடுதளத்தை 12 மாதங்களுக்குள் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் 2½ ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் பாதிஅளவு கூட பணிகள் நடைபெறவில்லை. மாநிலஅரசு இதில் தனிகவனம் செலுத்தி சிந்தடிக் ஓடுதளத்தை விரைந்து முடித்து வீரர், வீராங்கனைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர் கூறும்போது, எங்கள் நிறுவனம் சர்வதேச அளவிலான சிந்தடிக் ஓடுதளம், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்தியாவில் நாக்பூர், ராஜஸ்தான், அரியானா, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களில் சிந்தடிக் ஓடுதளம் அமைத்துள்ளோம். ஆனால் தஞ்சையில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்க நிதி முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பிரிட்டனில் ஆர்டர் கொடுத்த சிந்தடிக் ஓடுதளத்துக்கான மூலப்பொருட்கள் அங்கிருந்து வரவழைக்கப்படாமல் அங்கேயே கிடப்பில் உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்