கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மாற்றுப்பாதை அமைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2023-07-15 10:36 GMT

கலசபாக்கம்

கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மாற்றுப்பாதை அமைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ரெயில்வே கேட்

கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு தற்போது  சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி தொடங்குவதற்கு முன்பு மாற்றுப்பாதைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் இங்கு திடீரென சாலையின் நடுவில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பணி நடைபெறும் இடத்திற்கும் வேலூர் மெயின் ரோடு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

இந்த இடத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையில் முன்னறிவிப்பு செய்து எந்த பலகையும், மாற்றுப்பாதைக்கான எந்த அறிகுறியும் வைக்காத காரணத்தால் வெளியூரில் இருந்து வரும் மக்கள் ெரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாற்று பாதை இல்லை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்பாக அந்த வழியாக செல்லும் கிராம மக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இதற்கான முறையான மாற்று பாதையும் அமைத்து தரப்படவில்லை வேலூர் மெயின் ரோட்டில் இருந்து ெரயில்வே கேட் வரையும் பணிகள் நடைபெற்று வருவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததால் வெளியூரில் இருந்து வரும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது.

உயரம் குறைவான சுரங்கப்பாதை

பணி நடைபெறும் இடத்தில் 25 அடிக்கு மேல் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

அங்கேயும் எந்த ஒரு தடுப்பும் இல்லாத காரணத்தால் வாகனங்களில் வேகமாக வருபவர்கள் அதன் அருகே வந்து திடீரென பிரேக் போட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளன.

மேலும் இங்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதை மிகவும் உயரம் குறைவாக அமைப்பதன் காரணத்தால் இப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு லாரியில் ஏற்றி செல்லும் போது இந்த சுரங்கப்பாதை போதுமானதாக இருக்காது.

அதனால் கரும்பு லோடு எடுத்துச் செல்லும் வகையில் சுரங்கப்பாதையை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் இதற்கு மாற்று ஏற்பாடாக வேறு பாதை அமைத்து தர வேண்டும்.

மேலும் பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்