சேலம் சூரமங்கலத்தில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம்- 4 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்

சேலம், சூரமங்கலத்தில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் 4 ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-06 21:49 GMT

சூரமங்கலம்:

ரெயில்வே பாலம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் அருகில் சேலம்- சென்னை மார்க்க ரெயில்வே பாதையில் பழைய ரெயில்வே பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைப்பதற்கான பணி கடந்த 4-ந் தேதி காலையில் தொடங்கியது.

அதாவது, பொக்லைன் எந்திரங்களை கொண்டு பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் கான்கிரீட்டால் ஆன ராட்சத பெட்டிகள் தயார் செய்யப்பட்டன. அந்த பெட்டிகள் பொருத்தும் பணி நடந்தது. கடந்த 4-ந் தேதி வரை 6 கான்கிரீட் பெட்டிகள் அமைக்கப்பட்டன. மீதமுள்ள பெட்டிகள் பதிக்கும் பணி இன்று நடக்கிறது.

ரெயில்கள் நேரத்தில் மாற்றம்

இதற்கிடையே சேலம் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) ஆலப்புழா ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 9.10 மணிக்கு புறப்படும்.

எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக காலை 11.40 மணிக்கு புறப்படும். அரக்கோணம்- சேலம் இடையே இயக்கப்படும் ரெயில் (16087) இன்று அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். ஜோலார்பேட்டை -சேலம் இடையே இயக்கப்பட மாட்டாது. இதேபோல் சேலம்- அரக்கோணம் ரெயில் (16088) ஜோலார்பேட்டை- அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் சேலம்- ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்