ரூ.114½ கோடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி
மயிலாடுதுறையில், ரூ.114 ½ கோடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
மயிலாடுதுறையில், ரூ.114 ½ கோடியில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.114 கோடியே 48 லட்சம்
மயிலாடுதுறையில், 2 லட்சத்து 82 ஆயிரத்து 884 சதுர அடி பரப்பளவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், ரூ.114 கோடி 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட 04.04.2022 அன்று அடிக்கல் நாட்டினோம். ஏற்கனவே, 2 முறை இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அறிவுறித்தி உள்ளேன். கீழ்தளம் அல்லாமல், 7 தளங்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் 3 கூட்ட அரங்குகள் உள்ளது.
95 சதவீத பணிகள் நிறைவு
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதற்கு ஒன்றும், மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கும் என மற்றொன்றும், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள், பல்வேறு துறை சார்ந்த கூட்டங்கள் நடத்துவதற்கு என 3 கூட்டரங்கங்கள் அடங்கிய சிறப்பான மாவட்ட கலெக்டர் அலுவலகமாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து செல்வதற்கு ஏதுவாக எல்லா விதமான வசதிகளும் அமைந்துள்ளது.
இப்போது முழுமையாக 95 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக, தரங்கம்பாடி தாலுகா காளஹஸ்தினாதபுரம் கிராமத்தில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டு வைத்தார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் கோதண்டராமன், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள் தலைமை என்ஜினீயர் வள்ளுவன், தலைமை என்ஜினீயர் (நெடுஞ்சாலைத்துறை) சந்திரசேகர், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள் பாலரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.