ரூ.3¼ கோடியில் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி
ரூ.3¼ கோடியில் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.3 கோடியே 35 லட்சம் மதிப்பில் அதே வளாகத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கிருந்த வேளாண்மை பொறியியல் துறையின் கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேலு, வேளாண்மை துறை இணை இயக்குனர் சண்முகம், துணை இயக்குனர் எம்.பெரியசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, கட்டிட ஒப்பந்ததாரர் ஏ.எஸ்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி பொறியாளர் எஸ்.பாரதி ஆகியோரிடம் பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
வேளாண் விரிவாக்க மையம்
முன்னதாக அரகண்டநல்லூரில் ரூ.2 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மைய கட்டிடத்தையும், ரூ.1 கோடியே 69 லட்சம் செலவில் நடைபெற்று வரும் அரகண்டநல்லூர் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் அ.சா.ஏ.பிரபு, கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராஜீவ்காந்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் மணிவண்ணன், மணம்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் சக்திசிவம், ஜெய்சங்கர், பிரகாஷ், வ.பிரபு, கணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
தொடர்ந்து குலதீபமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், சத்துணவு மைய கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். மேலும் ஆலம்பாடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையையும் அவர் திறந்து வைத்தார்.