கருணாகரச்சேரி ஊராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி
கருணாகரச்சேரி ஊராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.;
பட்டாபிராம் அடுத்த கருணாகரச்சேரி ஊராட்சிக்குட்பட்ட அமுதூர் மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றில் மழை வெள்ளம் வரும்போது பொதுமக்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிக் கொண்டு செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அமுதூர் மேடு கிராமத்தில் உபரிநீர் கால்வாயின் குறுக்கே ரூ.5¾ கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி உதவியுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை நேற்று அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.