கிருஷ்ணகிரி மாவட்டத்தில்ரூ.8¼ கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணிகள்அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8¼ கோடி மதிப்பில் 39 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8¼ கோடி மதிப்பில் 39 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வகுப்பறை கட்டிடங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 8 கூடுதல் வகுப்பறைகள், அட்டக்குறுக்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடம், ஏனுசோனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடம், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 22 கூடுதல் வகுப்பறைகள் என 39 வகுப்பறைகள் மொத்தம் ரூ.8 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் கட்டப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பில் தெரு விளக்குகளை ஆற்றல் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசியதாவது:-
எண்ணற்ற திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், திறன்மேம்பாட்டு பயிற்சிகள், தனியார் துறையில் வேலைவாய்ப்பு, விலையில்லா மிதிவண்டிகள், கல்வி உதவிதொகைகள், என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ரூ.8 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 39 வகுப்பறைகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள், உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் ரூ.2 கோடியே 77 லட்சம் மதிப்பில் தெரு விளக்குகளை ஆற்றல் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் மொத்தம் 2,264 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர் நல அலுவலர் ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.