சிமெண்டு சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்
எல்லநல்லி-ஜோதிநகர் இடையே சிமெண்டு சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி
எல்லநல்லி-ஜோதிநகர் இடையே சிமெண்டு சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
ஊட்டியை அடுத்த எல்லநல்லி கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எல்லநல்லி கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் போன்ற இடங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நோய்வாய்ப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது.
ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
இதை அறிந்து முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த சிலர், சாலை அமைக்க இடையூறு ஏற்படுத்துகின்றனர். சாலை அமைத்தால் கோவிலுக்கு செல்லும் வழி தடைபடும் என்று கூறுகின்றனர். ஆனால் சாலை அமைத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். எனவே சாலை பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.