கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.7.60 கோடியில் தடுப்பணை கட்டும் பணி

நெமிலி அருகே கொசஸ்தலை ஆற்றின்குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-04 17:21 GMT

தடுப்பணை பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கரியாக்குடல் மற்றும் கீழ் வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில், 155 மீட்டர் நீளம், 1 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை 4 மணல் போக்கிகள் கட்டமைப்புடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை அதிகபட்சமாக 19,906 கன அடி தண்ணீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பணை பணிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வுசெய்தார். அப்போது தடுப்பணை பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், கலெக்டரிடம் விளக்கி கூறினார். மேலும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும், கட்டுமானத்தின் தரம் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

இதனை தொடர்ந்து திருமால்பூர் கிராமத்தில் கோவிந்தவாடி கால்வாய் அருகே அமைந்துள்ள விருகசீல நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 10 கண் மதகு கடந்த 2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பழுதடைந்தது. அந்த மதகு சீரமைக்கப்பட்டுள்ளது. அதையும், பல்லூர் ஏரி மற்றும் தக்கோலம் கொண்டத்தில் உள்ள தலை மதகு பழுது பார்க்கும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.

விருகசீலா நதி 10 கண் மதக்கு சீரமைக்கப்பட்டுள்ளதால் முருங்கை ஏரிக்கு சுமார் 60 வருடத்திற்கு பிறகு நீர் சென்று ஏரி நிரம்பி வழிந்து செல்கிறது. அதேபோல் 50 வருடத்திற்கு பிறகு பனப்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் சென்று நிரம்பியுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்யப்பட்டு மழை நீர் ஏரிகளில் நிரப்பப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து இது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சந்திரன், தமிழ்ச்செல்வன், மெய்யழகன் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்