ஊட்டுவாழ் மடம் ரெயில்வே கேட் அருகே புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்

சுரங்கப்பாதை பணிக்காக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டின் வலதுபுறம் புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-04 18:45 GMT

நாகர்கோவில்:

சுரங்கப்பாதை பணிக்காக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டின் வலதுபுறம் புதிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரெயில்வே கேட்

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வருவதற்கு முன்பே ரெயில் நிலையத்தின் பின்புறம் ஊட்டுவாழ்மடம், கருப்புகோட்டை உள்ளிட்ட 5 கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. தற்போது இங்கு 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் மக்கள் நாகர்கோவில் வருவதற்காக ஊட்டுவாழ்மடத்தில் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேட் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள். ஆனால் ரெயில் போக்குவரத்துக்காக தினமும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கேட் மூடப்படுகிறது. அந்த வகையில் தினசரி 13 மணி நேரம் வரை கேட் மூடப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லவும், இருசக்கர வாகனம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லவும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை

எனவே ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது. அதன் பலனாக தற்போது ரூ.4.5 கோடி செலவில் சுரங்கப்பாதையை தற்போதைய கேட்டின் தெற்கு பக்கம் அமைக்க திட்டமிட்டு பூமி பூஜையும் நடந்தது.

ஆனால் ரெயில்வே கேட்டை கடக்க அந்த கிராம மக்களுக்கு எந்த விதமான மாற்று ஏற்பாடு செய்யாமல் இருந்தது. ்அதேநேரத்தில் ரெயில்வே கேட் 4 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டுமானால் 4 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. அதாவது பழையாறு கரை வழியாக சோழன்திட்டை தடுப்பணைக்கு சென்று அங்கிருந்து கன்னியாகுமரி சாலை வழியாக வரவேண்டும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுவார்கள் என்பதால் மாற்றுத் திட்டமாக ரெயில்வே கேட்டின் வலதுபுறம் சிறிதாக புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், ரெயில் பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்தனர்.

2 வாரத்தில்...

இதை பரிசீலித்த ரெயில்வேத்துறை ரெயில்வே கேட்டின் வலதுபுறத்தில் புதிய சாலை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணி தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 வாரங்களில் முடிக்கப்பட்டு சுரங்க பாதை பணிகள் தொடங்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்