கட்டுமான தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம்
நெல்லையில் கட்டுமான தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
கட்டுமானம் மற்றும் பனைத்தொழில் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கட்டுமான தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. 'பி' காலனியில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஜெ.எல்.குமார் தலைமை தாங்கினார். நெல்லை எஸ்.மகாலிங்கம் வரவேற்றார். மாநில தலைவரும், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன் குமார் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நிர்வாகிகள் பழனிவேல், கோபி, சிவராமலிங்கம், பச்சைமுத்து, தினகர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சூசைராஜ் நன்றி கூறினார்.
பின்னர் பொன்குமார் கூறுகையில், ''கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச ஜி.எஸ்.டி. போடப்பட்டு உள்ளது. அதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை மற்றும் மணல் விற்பனையை அரசு கண்காணிக்க வேண்டும். தனியார் நிலத்தில் மண் அள்ளுவதற்கு அனுமதி தரவேண்டும். கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி எளிமையாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாகி விட்டதால் கட்டுமான வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளோம். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்த விஷயத்தில் வேகமாக முடிவு எடுத்து செயல்படுத்த முடியாது'' என்றார்.