தொகுதிப் பங்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், தி.மு.க. தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் ஆலோசனையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி, ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் என்னென்ன என்பது பற்றியும், காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாதது குறித்தும் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.