திருமங்கலம் ஓமியோபதி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும்வரை விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மாணவர் படிப்பது குறித்து பரிசீலனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருமங்கலம் ஓமியோபதி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும்வரை விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மாணவர் படிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்;

Update: 2023-04-24 20:56 GMT


சென்னை செல்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியின், மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தற்போது பரவி வருவது வீரியம் இல்லாத கொரோனா வைரஸ், பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் 11 ஆயிரம் என இருந்தாலும், தமிழகத்தில் தினசரி பாதிப்பு 500 வரை சென்று, தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. எனவே, மதுரை சித்திரை திருவிழாவில் வழக்கமான விதிமுறைகளை கடைபிடித்தால் போதும்.

சமீபத்தில் போலி டாக்டர்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். நீண்ட காலமாக அவர்கள் இருந்து வந்தாலும், இந்த ஆட்சியில்தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் கூட, ஒரே நாளில் 73 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கான, விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் வகுத்திருக்கிறது. தமிழக அரசும் தமிழக மாணவர்கள் நலன் குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி கல்லூரி கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பதாக தெரிகிறது. அதனால், வேறு இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அந்த மாணவர்கள் படிக்க பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்