"வன்கொடுமை வழக்கில் ஜாமீன் அளிக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சேபனையை பரிசீலியுங்கள்" - கீழ்கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் ஜாமீன் அளிக்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கீழ்கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-01 22:01 GMT


வன்கொடுமை தடுப்பு வழக்குகளில் ஜாமீன் அளிக்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கீழ்கோர்ட்டுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நிலப்பிரச்சினை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டில் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன் தரப்பினர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி லட்சுமணன், சுரேஷ் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அவமானத்தை தடுக்க சட்டம்

இந்த மனுக்களை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வழக்கின் எதிர்தரப்பினரின் ஜாமீன் மனுவை கீழ்கோர்ட்டு விசாரித்தபோது, புகார்தாரர் தரப்பின் ஆட்சேபத்தை பரிசீலித்து இருந்தால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி இருக்கமாட்டார்கள்.

இப்போது ஜாமீன் வழங்கியது சரியானதா, எதிர்தரப்பினரின் தனிப்பட்ட சுதந்திரம், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, ஜாமீனுக்கு பிந்தைய சூழல் போன்றவற்றை ஆராய வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் ஆட்சேபத்தையும் பதிவு செய்து கீழ்கோர்ட்டு எந்திரத்தனமாக ஜாமீன் அளித்து இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. ஆதிதிராவிட-பழங்குடியின மக்களை துன்புறுத்துவது, அவமரியாதை, அவமானப்படுத்துவதை தடுக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

ஆட்சேபத்தை பரிசீலியுங்கள்

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுயமரியாதையை வழங்குதல், பயம், வன்முறை மற்றும் அடக்குமுறையற்ற கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதுதான் சட்டத்தின் நோக்கம். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவான வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கீழ்கோர்ட்டுகள் பரிசீலிக்க வேண்டும்.

இந்த வழக்கின் ஒரு மனுதாரரும், ஜாமீன் பெற்றவர்கள் தரப்பினரால் கொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த அளவுக்கு வெறுப்பும், விரோதமும் இருந்து உள்ளது. எனவே வன்கொடுமை தடுப்பு வழக்கில் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கு கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கு மீண்டும் அதே கோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் தரப்பு ஆட்சேபத்தையும் கருத்தில் கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுக்க வேண்டும். கோபாலகிருஷ்ணன் தரப்பினர் 2 வாரத்தில் கீழ்கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்