நீர்நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்
நீர் நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று கோவையில் நடந்த நொய்யல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
நீர் நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று கோவையில் நடந்த நொய்யல் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
நொய்யல் பெருவிழா
அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் பெருவிழா தொடக்க நிகழ்ச்சி கோவை பேரூரில் உள்ள ஆதின வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
முதலில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தமிழில் பேசிய கவர்னர் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாயாக பிரார்த்திக்க வேண்டும்
நம் நாட்டில் நீர்நிலைகளுடன் உள்ள தொடர்பு என்பது நமது உணர்வுகளுடன் உண்டான தொடர்பு. ஆனால் பல ஆண்டுக ளுக்கு முன்பு நமது கலாசாரத்தை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டு விட்டது. பாரதம் என்றால் ஆறுதான் என்று சொல்லும் கலாசாரத்தை கொண்ட நமது நாட்டில், நாம் யார் என்பதை ஆறுகள் மூலம் தான் சொல்லப்படுகிறோம்.
இயற்கையை பாழாக்கி வருவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல ஆறுகள் வறண்டு விட்டன. இலக்கியங்களில் மட்டுமல்லாமல் இதிகாசங்களும் ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றன. தண்ணீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை. எனவே தண்ணீரை நாம் தாயாக நினைத்து பிரார்த்திக்க வேண்டும்.
பிரிவினையை ஏற்படுத்தினர்
அன்னியர்கள் நமது நாட்டுக்கு படையெடுத்து வந்து கலாசாரத்தை சீரழித்தனர். ஆனால் குருமார்கள், சன்னியாசிகள் தான் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். தற்போது மேற்கத்திய கலாசாரம் அந்த தொடர்பில் இருந்து நம்மை துண்டித்து விட்டது.
அன்னியர்கள் நமது நாட்டை விட்டு சென்ற பின்னர் தொழிற்சாலைகள், பொருளாதாரத்தில் நாம் வளர்ந்தாலும் நமது பாரதத்துடன் இருந்த உயிர் பிணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அன்னியர்கள் வந்த பிறகு தான் சாதி, மதம், ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை நமக்குள் ஏற்படுத்தி விட்டனர். எனவே நாம் அதை மறந்து நாட்டை வலுப்படுத்துவதே நமது கடமை ஆகும்.
2047-க்குள் வளர்ந்த நாடு
நிலவுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நிலவை தாங்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட சில நாடுகள் நினைத்து வருகின்றன. அந்த நாடுகளின் மத்தியில், நிலவு அனைவருக்கும் சொந்தமானது என்று சொல்லும் வகையில், நிலவின் தென்துருவத்துக்கு நாம் சென்று சாதனை படைத்து விட்டோம். நிலவில் கிடைக்கும் தகவல்களை நமது நாடு மட்டும் வைத்துக்கொள்ளாது. மற்ற நாடுகளுக்கும் வழங்குவோம்.
இந்த உலகின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறோம். எனவே சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு முன்பே வருகிற 2047-ம் ஆண்டுக்குள் வலிமையான, வளர்ந்த நாடாக நாம் மாறுவோம். அதன் பின்னர் இந்த உலகத்துக்கே நமது நாடுதான் வழிகாட்டும்.
அறிவுரை தேவையானது
ரிஷி, சன்னியாசிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் அறிவுரையை வழங்குவார்கள் என்பதால் அவர்களின் அறிவுரை இந்த உலகத்துக்கு தேவையானது. எனவே நாம் யார் என்பதை மற்ற நாடுகளுக்கு உணர வைக்க வேண்டும். அதற்கு நீர்நிலைகள் பாதுகாத்தால் தான் நாம் வளர்ச்சி அடைய முடியும். எனவே நீர் நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஆறுகளை அன்னையாக பார்க்கும் மனநிலையை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேரூர் படித்துறைக்கு சென்று நொய்யல் ஆற்றில் மலர்தூவி மற்றும் புனிதநீர் ஊற்றி கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டார். விழாவில் பேரூர் ஆதீனம் சந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான ஞானதேசிய பரமாச்சாரிய சுவாமிகள், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செந்தில்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.