நீலகிரி மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு வனவளங்களை பாதுகாப்பது அவசியம்

நீலகிரி மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு வனவளங்களை பாதுகாப்பது அவசியம் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.;

Update: 2022-11-25 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு வனவளங்களை பாதுகாப்பது அவசியம் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் நீலகிரி மண்டல செயலாக்க திட்டம் தயாரித்தல்-2047 தொடர்பாக பங்குதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதற்கு சிறப்புப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிக்காரானா முன்னிலை வகித்தார். கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி, மலை மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் உள்ளது. மாவட்டத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுசூழலையும், வனவளங்களையும் பாதுகாப்பது அவசியம். எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்க பங்குதாரர்களின் கூட்டங்கள் அவசியம். இது செயலாக்க திட்டத்திற்கு முன்னோடியாக அதன் தேவைகளை உணர உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்களின் பங்கேற்புடன் மாவட்டத்தில் உள்ள சவால்கள், திறன்கள் மற்றும் வளர்ச்சிகளை அடையாளம் காண்பதே கூட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு மாதத்துக்குள் தயாரிப்பு

போபால் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியின் திட்ட இயக்குனர் ரமா பாண்டே பேசும்போது, 'தமிழகம் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த முதன்மை திட்டம் தயாரிக்கும் பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது. பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு 9 மாதத்துக்குள் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு வழங்கப்படும் என்றார்.

தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு திட்டமிடல் இயக்குனரகத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் சுப்ரமணி கூறுகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கோவை மற்றும் நீலகிரி மண்டலத்துக்கான முதன்மை திட்டம் தயாரிக்கும் பணியை போபாலில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியும், மதுரை மண்டலத்துக்கான முதன்மை திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியும் தயாரிக்கவுள்ளது என்றார்.

விடுதி உரிமையாளர்கள்

இந்த திட்டம் தயாரிப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுலாத்துறை, உணவு விடுதி உரிமையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் அவர்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் நீலகிரி சுற்றுச்சூழல் கூட்டமைப்பு சங்க முன்னாள் இயக்குனர் சுர்ஜித் சவுத்ரி, மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்