சேலத்தில், 7-ந் தேதி நடைபெறும் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு பங்கேற்கிறார்கள்

சேலத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடைபெற உள்ள சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா தெரிவித்தார்.

Update: 2022-08-20 18:28 GMT

அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான விழா அழைப்பிதழை கோவிலின் அறங்காவலர் குழு தலைவரும், சோனா கல்விக்குழுமத்தின் தலைவருமான வள்ளியப்பா நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதால் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

2-ந் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன. 4-ந் தேதி முதல் கால யாக பூஜை, 5-ந் தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜைகள், சாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 6-ந் தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜைகளும், தீபாராதனை உள்ளிட்டவைகளும் நடைபெற உள்ளன.

மகா கும்பாபிஷேகம்

7-ந் தேதி காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரர் சாமிக்கு திருக்கல்யாணம், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் கலெக்டர் கார்மேகம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்