ரூ.6.37 கோடியில் இணைப்பு குழாய் அமைக்கும் பணிராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

Update: 2023-06-17 18:45 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரிக்கு 500 படுக்கை வசதிகளுடன் புதிதாக அரசு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்குவதற்காக இணைப்பு குழாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்ட முசிறி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள் ஒன்றுக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்திடும் வகையில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் 12.50 கி.மீ. தொலைவிற்கு இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நாமக்கல் செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் அகிலாபானு, உதவி பொறியாளர் முனியன், அட்மா குழு தலைவர் தங்கவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்