10 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை தொகுதியில் களமிறங்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Update: 2024-03-18 22:15 GMT

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.இதில் 1952, 1957, 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தாணுபிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி கண்டார். இதேபோல் 2009-ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.

2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்