குமரியில் 3 இடங்களில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குமரியில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 543 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-15 18:45 GMT

குழித்துறை:

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குமரியில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 543 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்திலும் சாலை மறியல், மொட்டை அடிக்கும் போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம் என பல போராட்டங்களை நடத்தினர்.

நாகர்கோவிலில் ரெயில் மறியல்

இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, இரணியல் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் நேற்று கோட்டார் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஜய்வசந்த் எம்.பி.

போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவாது:-

ஜனநாயக நாடான இந்தியாவை சர்வாதிகாரமாக மாற்றும் நடவடிக்கையில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிபோனது. பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஏழை மக்களை மறந்து விட்டது.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை நாட்டில் தலைதூக்கி உள்ளது. ராகுல்காந்திக்கு எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்யும் வரை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

120 பேர் கைது

போராட்டத்தில் மண்டல தலைவர் சிவபிரபு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், பிரவீன், சீனிவாசன், சோனி மிதுலா உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென கோட்டார் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு முன்னதாக ரெயில் நிலைய வளாகத்தில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ராமர், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அமைத்த இரும்பு பேரிக்கார்டுகளை தள்ளியபடி காங்கிரசார் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விஜய்வசந்த் எம்.பி. உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 54 பேர் பெண்கள் ஆகும். கைது செய்யப்பட்ட அனைவரும் கோட்டார் பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குழித்துறை

இதேபோல் குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் மற்றும் ஏராளமான காங்கிரசார் குவிந்தனர்.

காலை 10.30 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அந்த ரெயிலை காங்கிரசார் மறிக்காமல் கோஷத்தை மட்டும் எழுப்பினர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கைது

இந்தநிலையில் 11 மணிக்கு கன்னியாகுமரி-பெங்களூரூ ெரயில் குழித்துறை ெரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அப்போது காங்கிரசார் போலீஸ் தடையை மீறி ரெயில் தண்டவாளத்துக்கு சென்று ரெயிலை மறித்தனர். மேலும் சிலர் ரெயில் என்ஜினின் முன்பக்கம் ஏறியபடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் ரெயில் மறியலில் ஈடுபட்டதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, மாநில பொதுச் செயலாளர் ஜோஸ் ராபின்சன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலு, அருள்ராஜ், சுஜின்குமார், சாமுவேல் உள்பட 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

இரணியல்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ெரயில் மறியலில் ஈடுபட காங்கிரசார் நேற்று காலை நெய்யூரில் குவிந்தனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக இரணியல் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். உடனே அவர்களை போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர்.

இதனால் காங்கிரசார் திங்கள்நகர்-அழகியமண்டபம் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வட்டார தலைவர்கள் பொன் சாலமன், கிறிஸ்ட் ஜெனித், பொன் பால்துரை, காலபெருமாள், செல்வராஜ், முருகானந்தம், ஜெயசிங், நகர தலைவர் சந்திரசேகர், காங்கிரஸ் நிர்வாகிகள் சாமுவேல் சேகர், யூசுப்கான், விஜிலியாஸ், அய்யாதுரை, விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மனோகரசிங், எட்வின்ஜோஸ், அனிஷா கிளாடிஸ், டென்சிங் மற்றும் ஏராளமான காங்கிரசார் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் போலீசார் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 198 பேரை கைது செய்து ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 67 பெண்கள் அடங்குவர்.

மாவட்டத்தில் 3 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 543 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்