அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் வி.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மெய்ஞானமூர்த்தி, டி.வி.பாண்டியன், நகர தலைவர்கள் மோகன், முரளி, வட்டார தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இத்திட்டம் இந்திய ராணுவத்தை வலிமை இழக்க செய்யும், எனவே இதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருச்செங்கோடு, குமாரபாளையம்
திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், அக்னிபத் திட்டத்தை கைவிடகோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பொருளாளர் பொன்னுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராமசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தன், நந்தகோபால், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமத்தி வட்டார தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் நகர தலைவர் பெரியசாமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் கபிலர்மலை வட்டார தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் மணி, பரமத்தி வட்டார துணைத்தலைவர் காளியப்பன், நாமக்கல் மேற்கு மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவர் காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.