காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்:70 பேர் கைது
தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.;
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் நேற்று திரண்டனர்.
அங்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.