3 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல்

கீழ்வேளூர் அருகே 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-15 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே 3  இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ெரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது .

அதன்படி நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூர் ரெயில்வே கேட் அருகே காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலை காங்கிரசார் மறிக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார், ரெயிலை மறிக்க முயன்ற மாவட்ட காங்கிஸ் தலைவர் அமிர்தராஜா உள்பட 5 பேரை கைது செய்தனர்.

36 பேர் கைது

இதேபோல் கீழ்வேளூர் ரெயில் நிலையம் அருகே நெம்மேலி ரெயில்வே கேட் பகுதியில் எர்ணாகுளம் -காரைக்கால் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்த்தில் ஈடுபட்ட கீழ்வேளூர் ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல் பொன்வெளி பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் அருகே திருச்சி - -காரைக்கால் ரெயிலை மறிக்க தண்டவாளத்தில் அமர்ந்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் ராஜ்குமார் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 36 பேரை கீழ்வேளூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்