ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: குமரியில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்-2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 278 பேர் கைது

ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 278 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-07 18:49 GMT

தக்கலை, 

ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 278 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராகுல்காந்தி மனு தள்ளுபடி

குஜராத் மாநிலம் சூரத் விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சூரத் விசாரணை கோர்ட்டு அளித்த தண்டனைக்கு தடைகோரி குஜராத் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நேற்று ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அழகிய மண்டபத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பிரேம்குமார், நகர தலைவர் ஹனுகுமார் முன்னிலை வகித்தனர். இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், பொதுச்செயலாளர் ஜான் இக்னேசியஸ், வக்கீல் அணி மாவட்ட தலைவர் ஏசுராஜா, மாநில குழு உறுப்பினர் ரத்தினகுமார், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோன்ஸ் இம்மானுவேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கைது

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை தக்கலை இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரின்ஸ் எம்.எல்.ஏ. கைது

குளச்சல் காமராஜர் பஸ்நிலையம் முன்பு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்டதாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சாமுவேல் சேகர், செயல் தலைவர்கள் விஜயகுமார், சகாயராஜ், டென்னீஸ், வட்டார தலைவர்கள் பால்துரை, சாலோமன், ஜெயசிங், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்கள் அபிஷேக், அய்யாத்துரை, பீட்டர்தாஸ், கல்லுக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகரசிங், மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் லிபின் பாபு, குளச்சல் நகர செயல் தலைவர் அந்திரியாஸ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின், நகர மீனவர் காங்கிரஸ் தலைவர் அருள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் மறியல்

இதேபோல் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், சாந்தி ரோஸ்லின், இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சகாயபிரவின், வக்கீல் ஜான்சவுந்தர், சேவியர் ஜார்ஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தில் இருந்து குஞ்சன் நாடார் சிலை வரை ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 18 பேரை கைது செய்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்