வேலூர் கலெக்டர் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-05 17:26 GMT

2 ஆண்டுகள் ஜெயில்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்கள் முன்பாக குவிக்கப்பட்டனர்.

மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் விசாரித்து அனுமதித்தனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியாக வேறு வழியாக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாநகராட்சி சிற்றுண்டி சமையல் கூடம் அருகே குவிந்தனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் எத்திராஜ் தலைமையில் மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் தினகரன், மனித உரிமைகள் பிரிவு மாநகர தலைவர் ஜேம்ஸ் ராஜேந்திரன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் குடியாத்தம் தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி புதுவசூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்