காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிப்பு

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2023-07-14 18:45 GMT

குறிஞ்சிப்பாடி

காங்கிரஸ் கொடிக்கம்பம்

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே புவனகிரி செல்லும் சாலையில் காமராஜர் சிலை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரத் ஜோரா யாத்திரையின் நினைவு கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கொடி கம்பத்தில் இருந்த காங்கிரஸ் கொடியை கழற்றி அதை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் கொடியின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர், துணை தலைவர் ஏ.என்.ராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி நகர தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் சிவராஜ், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று காலை அங்கே திரண்டு வந்து எரிந்து கிடந்த கொடியை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கொடியை எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இன்று(சனிக்கிழமை) காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில் கம்பத்தில் இருந்த காங்கிரஸ் கொடியை கழற்றி மர்ம நபர்கள் எரித்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்