விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க வேண்டும்- காங்கிரஸ்
தொடக்க வேளாண்மை கட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்கவும், மானிய விலையில் உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:-
தொடக்க வேளாண்மை கட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்கவும், மானிய விலையில் உரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மகேந்திரன், குணாபரமேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உட்கட்சி தேர்தல்
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மேலிடப்பார்வையாளருமான அபிலேஷ் நாயர் கலந்து கொண்டு விரைவில் நடைபெற உள்ள உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறியதுடன், தேர்தல் நடத்தும் முறைகளை விளக்கி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புறவழிச்சாலை
வருகிற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் பூதலூரில் சார் கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கவும், திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள்
மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் மானிய விலையில் உரங்கள் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.