குப்பைகளை கொட்டி காங்கிரஸ் கவுன்சிலர் போராட்டம்
பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி காங்கிரஸ் கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி காங்கிரஸ் கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேரணாம்பட்டு நகராட்சியில் நிரந்தர குப்பை கிடங்கு இல்லை. இதனால் திறந்த வெளிகளில் குப்பைகள் கொட்டப்பட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோடு தரைக்காடு பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க கலெக்டர் உத்தரவின்பேரில் உடனடியாக இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு பாறைகள் நிறைந்த கரடு முரடான இடத்தை சமன் படுத்தி சீரமைக்கும் பணியில் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் குப்பை கிடங்கு அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைய வில்லை இதனால் நகரில் பல இடங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் முஜம்மில் அஹம்மத், நேற்று மதியம் குப்பைகளை வண்டியில் எடுத்து வந்து நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த நகராட்சி ஊழியர்கள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமரசம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.