திருப்பூர்
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திருப்பூர் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று வட்டார நிர்வாகிகள் வந்தனர். வடக்கு மாவட்ட தலைவர் உடல்நலக்குறைவு காரணமாக வரவில்லை. இதனால் கட்சியின் உட்கட்சி தேர்தல் வேட்பு மனு பெறுவது தொடர்பாக மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனு பெறுவதில் தொடர்ந்து தாமதப்படுத்துவதாக கூறி கட்சியினர், கட்சி அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வடக்கு மாவட்ட தலைவர் கோபியிடம் கேட்டபோது, 'கட்சியின் தலைமை அறிவிப்பு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புதலுடன் வேட்பு மனு பெறுவதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கிறது. வேட்பு மனு பெறும் தேதி இதுவரை அறிவிக்கவில்லை. எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) கட்சி அலுவலகத்துக்கு வரமுடியவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரி ஒப்புதலுடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை வேட்பு மனு வினியோகம் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனு வட்டாரம் வாரியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பெறப்படும். கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படையாக வேட்பு மனு பெறப்படும். இதுகுறித்த அறிவிப்பு கட்சியின் தலைமை அலுவலக அறிவிப்பு பலகையில் முறைப்படி ஒட்டப்பட்டுள்ளது. வேண்டும் என்று தாமப்படுத்தவில்லை' என்றார்.
==============