இரு தரப்பினர் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நரியங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம்(வயது 45). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை(33). நிலக்கடலை வியாபாரி. சம்பவத்தன்று சின்னத்துரை அப்பகுதிக்கு வெளியூரிலிருந்துவேறொரு நிலக்கடலை வியாபாரியை அழைத்து வந்து அங்குள்ள விவசாயிகளிடம் நிலக்கடலை மூட்டைகளை வாங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நீலமேகம் வெளியூரிலிருந்து வந்த நிலக்கடலை வியாபாரியிடம் நிலக்கடலை விலை குறித்து விசாரித்துள்ளார். அப்போது சின்னதுரை நீலமேகத்திடம் நிலக்கடலை விலை குறித்து கேட்கக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது சின்னதுரைக்கும், நீலமேகத்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீலமேகத்தின் உறவினர்களான காளமேகம் (40), செந்தில்(33), இளவரசி(35), லலிதா(65) மற்றும் சின்னதுரை உறவினர்களான வன்மீரா(31), மன்மதகாசி(60) ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அப்போது தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த நீலமேகம் மற்றும் வன்மீரா ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நீலமேகம் மற்றும் சின்னதுரை மனைவி வன்மீரா ஆகியோர் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.