இரு தரப்பினர் இடையே மோதல்; காரை அடித்து நொறுக்கி கவிழ்ப்பு

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தில் வீட்டில் புகுந்த நாயை விரட்டியதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கார் அடித்துநொறுக்கி கவிழ்க்கப்பட்டது. 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-06-28 18:49 GMT

வீட்டில் புகுந்த தெருநாய்

பெரம்பலூரை அடுத்த அம்மாபாளையம் காலனித்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 53). இவரது வீட்டின் எதிர்புறத்தில் வசிப்பவர் அன்பழகன்(35). இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வசந்தாவின் வீட்டிற்குள் அன்பழகனின் சகோதரர் அருள்குமாரின் வளர்ப்பு நாய் நுழைந்து உணவில் வாய்வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதன்மீது வசந்தா தண்ணீரை ஊற்றி வெளியே விரட்டினார். அப்போது அன்பழகன் வசந்தாவிடம் எதற்காக நாயை விரட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வசந்தாவின் சகோதரர்கள் தேவர், ரவி, வசந்தாவின் மகன் ரமேஷ், உறவினர் மகள் மோனிஷா ஆகியோர் அன்பழகனிடம் சென்று எதற்காக தகராறு செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது அன்பழகனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் அருள்குமார் பேசியதால், இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வசந்தா தரப்பினர் அருள்குமாரை தாக்கியுள்ளனர். இதில் அருள்குமார் காயம் அடைந்தார். உடனே அவரை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கார் கவிழ்ப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வசந்தா தரப்பினர் தாங்கள் சென்னைக்கு அவசரமாக செல்லவேண்டும். பிறகு போலீசில் புகார் கொடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வசந்தா தரப்பினரை சென்னைக்கு காரில் செல்ல அனுமதித்தனர்.

இதனிடையே அன்பழகன் தரப்பினர் அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே காரை வழிமறித்ததால், இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அன்பழகன் தாக்கப்பட்டார். அவருக்கு கழுத்தில் வெட்டுக்காயமும், அன்பழகனின் உறவினர் ஜீவா மற்றும் வசந்தா தரப்பை சேர்ந்த ரமேஷ் மற்றும் ரவி ஆகியோரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் அன்பழகனின் தந்தை அண்ணாதுரை தலைமையில் அவரது உறவினர்கள் அன்பழகனை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலின்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

இதன்பிறகு வசந்தா தரப்பினர் சென்ற காரை அன்பழகன் தரப்பினர் அடித்து நொறுக்கி கவிழ்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முருகவேல் மற்றும் இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் தனித்தனி வழக்குகளாக பதிவு செய்து தேவராஜ், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்