பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
விக்கிரமசிங்கபுரம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியில் பிரீ கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா முடிந்தவுடன் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் சாலையில் மேல்நிலை வகுப்பு படிக்கும் சுமார் 20 மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். மேலும் இருதரப்பினரின் ஆதரவாளர்கள் சிலரும் இந்த தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளியின் வெளியே இருதரப்பினர் மோதிக்கொண்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.