கோவில் திருவிழாவில் மோதல்; கல்வீச்சு

வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீஸ் ஏட்டு காயம் அடைந்தார்.

Update: 2022-11-09 19:09 GMT


வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீஸ் ஏட்டு காயம் அடைந்தார்.

கல் வீச்சு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியில் முத்தாலம்மன் மற்றும் அம்மச்சியார் அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அம்மச்சியார் அம்மன் கோவிலுக்கு செல்லும்போது, முத்தாலம்மன் கோவில் முன்பு பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இதை கண்டித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அப்பகுதியில் இரு தரப்பினரும் கற்களை வீசி மோதிக்கொண்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் கலைந்து செல்ல செய்தனர்.

ஏட்டு படுகாயம்

இந்த சம்பவத்தில், கார் சேதப்படுத்தப்பட்டது. மம்சாபுரம் போலீஸ் ஏட்டு சண்முக பாண்டியன் (வயது 40) படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சண்முக பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த சசிகுமார், அருண்பாண்டியன், வீராசாமி, சுரேஷ், வீரன்அசோக் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்