ரெயிலில் கடத்தி வந்த 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரெயிலில் கடத்தி வந்த 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-05-09 18:45 GMT

ராமநாதபுரத்தில் ரெயிலில் கடத்தி வந்த 350 கிலோ சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுறா துடுப்புகள்

சென்னையில் இருந்து நேற்று காலை ராமநாதபுரம் வந்த ரெயிலில் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரின பாகங்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் இருந்து இறக்கிய சில மூடைகளை 2 பேர் சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தனர்.

உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் அவற்றை பிரித்து பார்த்தபோது, சுறா மீன்களுக்கான துடுப்புகள் பதப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அந்த 2 பேரை பிடித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

3 வகையான சுறாக்களின் துடுப்புகள் இருந்தன. மொத்தம் 15 மூடைகளில் 350 கிலோ இருந்தன. இந்த சுறா துடுப்புகளை கடத்தி வந்ததாக வேதாளையை சேர்ந்தவரையும், தாதனேந்தல் பகுதியை சேர்ந்த டிரைவரையும் பிடித்து வந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை வழியாக கடத்த முயற்சி

இதுகுறித்து ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் கூறியதாவது:- எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரெயில்நிலையத்திற்கு சென்று சோதனையிட்டபோது சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சுறா துடுப்புகள் அரசால் தடைசெய்யப்பட்ட இனத்தில் வருகிறதா என்று ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி உள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்னர்தான் முடிவு செய்யப்படும். தடைசெய்யப்பட்ட வகையை சேர்ந்தது என தெரிந்தால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இவர்கள் மீது இதற்கு முன்னர் வழக்கு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம். வழக்கு இருந்தால் கைது செய்யப்படுவார்கள்.

கடல் சுறா துடுப்புகளை சூப் வைத்து குடிப்பதற்காக வாங்கி செல்வதாக கூறி உள்ளனர். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் சுறா துடுப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது. எனவே அதற்காக இலங்கை வழியாக கடத்தி செல்ல திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்