1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மல்லசமுத்திரம் அருகே குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

Update: 2023-10-01 18:45 GMT

ரகசிய தகவல்

நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் ரேஷன்அரிசி கடத்தும் நபர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மல்லசமுத்திரம் அருகே உள்ள நத்தமேடு பகுதியில் ஒரு வீட்டிற்கு பின்புறம் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரேஷன்அரிசி பறிமுதல்

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,300 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன்அரிசி மூட்டைகளை சக்திவேல் (வயது40) என்பவர் பதுக்கி வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் ரேஷன்அரிசி மூட்டைகளை வடமாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நேற்று சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்