கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-24 21:00 GMT

உத்தமபாளையத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், கம்பம்மெட்டு மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை போலீசார் மறித்தனர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் அந்த ஜீப்பை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றனர். போலீசார் பின்னால் வருவதை பார்த்த ஜீப் டிரைவர், தனது வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மலைப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜீப்பில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்து 100 கிலோ (2 டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீப்பும், ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்